Friday, September 18, 2020

நீட் தேர்வு கவிதை | Neet Exam | Poem about Neet Exam

 குடிசைச் சுவர்களின் நடுவில் கந்தலாடை மறைக்க கத்தியின்றி கணக்கில்லா சுகப்பிரசவம் பார்த்தவள் எந்த கல்லூரியில் படித்து எழுதினாள் இந்தத் தேர்வை ....,


எட்டு குழந்தை பெற்ற பின்பும் எட்டிப் பிடிக்கும் நடையினை நடந்த எமது தாய்மார்கள் எந்தக் குருகுலத்தில் கல்வி பயின்றார்கள் 

பிழையில்லா மருத்துவம் பார்க்க....,


பொறுமையின் சிகரமாய் பூமித்தாய் இருப்பதாலும் 

நீதித்தேவதையின் கண்களையும் கட்டி விட்ட தைரியத்தினால் தானோ 

அரங்கேறுகின்றது இந்த அவலங்கள் ,


கட்டிய கணவன் முன்னே தாலியை கழட்டச் சொல்லும் கல்வியறிவு....,


ராமாயணத்தில் தீக்குளித்த சீதை 

இன்றளவும் தீப்பிளம்பின் பிடியில் சிக்கிக் கொண்டு தான் இருக்கிறாள். 


கலியுக ராவணர்களின் பிடியில் கல்வி சிக்கிக் கொண்டு பாரபட்சம் பார்ப்பதால் ..., 


வஞ்சமில்லா பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்தவர்கள் யாரோ !

அகிலம் முழுவதும் மழலைச் செல்வங்கள் 

சொல்லும் எதிர்கால கனவு ஒன்று தான்

மருத்துவம் பார்ப்பது ....,


கிழிந்த ஆடையும் எண்ணெய் வழிந்த முகத்தையும் ஏற்றுக் கொண்ட கனவை 

புறம் தள்ளி நிறுத்தியது கவுரவம் என்ற கர்வம் ...., 


காந்தியால் பெற்ற சுதந்திரம் கடைக்கோடி

ஏழை மகளை இன்னும் எட்டவில்லை போல,


கனவைக் கூட சுதந்திரமாக நிறைவேற்ற முடியாமல் கரிக்கட்டையாக சாயும் தருணத்தில் ....,


இதுவும் ஒரு நரபலி கொடுமை தானோ...!


ஒவ்வொரு முறையும் 

உயிர்களை பலியிட்டப் பின்னரே ஆரம்பிக்கிறது....,


விடியல் உண்டு , சோர்ந்து போகாதே !

என்ற நம்பிக்கையும் கருவிழியின் மறுவிழியில் 

பதிந்த நீண்டகால கனவும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று உணர வைக்க நடத்தப்படுவது தான்  இந்த 

“நீட்” தேர்வோ ....!


ஆறாம் அறிவை உயிர்ப்பிக்கும் கல்வியறிவு நீட் என்ற பெயருடன் 

ஐந்தறிவு ஜீவன் போல் இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்க காத்திருக்கிறதோ ....!

No comments:

Post a Comment

Followers