Sunday, September 27, 2020

மனிதம்


ஆழ்கடலின் பேரலையில் அனைத்தும் தடுமாறிய போது தைரியமாக எழுந்து நின்று கைக்கோர்த்தவன்

 

எங்கோ பூமாதேவி கோபக்கனலாய் பொங்கி எழும் போது பூவுலகம் மொத்தமும் அழையா விருந்தாளியாய் ஒன்று சேர வைத்தவன்

 

விழிகளில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைப்பதற்கு ஓடோடி வந்தது கரங்கள் அல்ல

ஒவ்வொருவரின் உணர்வுகளும்

 

நிறங்கள் பார்க்காமல்

மதங்கள் பார்க்காமல்

ஏற்றத்தாழ்வு பார்க்காமல்

உணர்வுகள் அனைத்தும் உறவுகளாய் 

ஒன்று சேர்ந்த மனங்கள்


பார்ப்போற்றும் தலைவனாயினும்

பாமரக் குடிமகனாயினும்

பாரபட்சமின்றி அனைவரையும் ஒற்றுமையாக்கிய மகாத்மா இவன்

 

அனிச்சை மலராய் துன்பத்தில் மட்டுமே பூக்கிறவன்

தொட்டாச்சிணுங்கியாய் இன்பத்தில் சுருங்கிக் கொள்கிறான்

 

மனிதன் முதன் முதலில் உச்சரித்த வார்த்தை 

அன்பின் அடித்தளமாய் விளங்கும் அம்மா என்பதால் தான்

அவனுக்குள் இருக்கும் அன்பான உணர்விற்குப் பெயர் 

மனிதம் என்றானதோ ?



காதல்

 சுவாசிக்கும் ஆக்சிஜன் ஹீலியம் வாயுவாக மாறிவிட்டதோ,

கால்கள் தரையை முத்தமிடாமல் மேலெழும்பி பறக்கிறது


இடி இடிக்காமல் வருணன் வராமல் இமைகளை இதமாக மின்னல் தாக்கிய காரணத்தினால் தானோ

இனம்புரியாத உணர்வு இதயத் துடிப்புடன் நட்பு பாராட்டுகின்றது


பெருவெடிப்புக் கொள்கையின் மூலம் உலகம் தோன்றியது என்று கூறும் அறிவியல்

எந்தக் கொள்கையின் மூலம் இவன் தோன்றினான் என்று கூற மறுக்கின்றது....,


ஆதாம் ஏவாள் சாப்பிட்ட ஆப்பிளின் மிச்சத் துளிகள் அழியா வரத்தை ஆண்டவனிடம் பெற்று விட்டதோ ....!

புதுவிதமான உணர்வை உடலெங்கும் பரவச் செய்கின்றது....,


மங்கிய பார்வையின் வெளிச்சத்தில் மங்காத ஆதவனாய் காட்சி அளிக்கிறான் கைப்பேசியின் திரையில் ....,


ஏட்டில் படிக்காதவனையும் ஏற்றமெடுத்து கவி பாட வைக்கும் வல்லவன்


பல வருடங்களாக சுமந்து பெற்றெடுத்த குழந்தை பேரும் புகழுடன் கம்பீரமாக நிற்க வைத்த காரணக்கர்த்தா இவன்

ஒரு ஆணையும் தாயாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரன்


இவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள்

காலம் உள்ள வரை தானும் இருப்பேன் என்ற சபதம் மேற்கொண்டவன்

பல பெயர்கள் இருந்தாலும் அனைவரும் அழைக்கும் பெயர் ஒன்றே


அது தான் “காதல்”

Saturday, September 26, 2020

9. SPB இரங்கல் அஞ்சலி கவிதை | S. P. Balasubrahmanyam | SPB RIP Kavithai



கூவும் குயிலும் கூக்குரலிட்டு கதறுகின்றது
குரலில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற ஆணவத்தை அழித்த சங்கீத ஸ்வரப்பிதா சங்கமித்து விட்டதால்

கடைக்கோடி ஜீவனுக்கும் ஓர் சந்தேகம் காதோரம் கேட்ட இசைக்குயிலின் கடைசிப் புதல்வன் கானல் நீராகி விட்டானோ என்று...!

ஒலியின் ஓசைக்கு உயிர்க் கொடுத்தவன் 
ஒளியோடு ஐக்கியமாகி விட்டான் ஆதவன் அஸ்தமிக்கும் போது தாலாட்டுப் பாட ஆளில்லை என்பதால் தானோ ....!

பல மேடையில் நின்று கொண்டே இசை நிகழ்ச்சி நடத்தியவரே
பாதாள மேடையில் துயில் கொள்ள சென்று விட்டாய் !!!

போதும் என்று நினைத்ததாலோ?

ஆண்டவனும் உன் இசைக் கேட்டு உறங்கினான் 
நீ உறங்க யார் இசை மீட்டினார்கள்....

வார்த்தைகளுக்கு குரலில் 
உயிர் கொடுத்தவனே
உன் குரலை யாரிடம் கொடுத்து விட்டு சென்றாய்
பாரதமாதாவின் மடித்துயில....!

உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் உயிர் பிரிந்தது என்பார்கள்,
உனக்கோ குரலில் தானே ஆன்மாவை வைத்தான் ஆண்டவன்
என்றும் உன் குரல் ஒலித்துக் கொண்டு தானே இருக்கும்
பிறகு எதை வைத்து மறைந்தாய் என்று ஒப்புக் கொள்வது ....

வாழ்க உன் புகழ்….
இந்த உலகம் உள்ள வரை !!!

Saturday, September 19, 2020

விடியல் உண்டு , சோர்ந்து போகாதே !

இந்த தலைப்பு இன்றைய காலக்கட்டத்தில் மட்டுமல்ல , நம் முன்னோர்கள் காலத்தில் நடந்ததையும் மேற்கோளாக காட்டலாம் , கஜினி முகமது பற்றி அனைவருக்கும் தெரிந்ததே, 17 முறை படையெடுத்து 18 வது முறையாக வெற்றிக் கொண்டார் என்பது . 

அவர் முடியாது என்று சோர்ந்து போயிருந்தால் வெற்றி என்பது கிடைத்திருக்குமா? முயற்சி என்ற விடியலை நாம் அனைவரும் சோர்ந்து போகாமல் என்றும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். 

மண்ணில் புதைக்கும் விதை சோர்ந்து போயிருந்தால் 

சூரிய வெளிச்சம் என்னும் விடியலை பார்க்க முடியுமா, 

உளியின் வலியை தாங்க முடியாமல் பாறையானது சோர்ந்துப் போயிருந்தால் கையெடுத்து கும்பிடும் கடவுள் சிலையும் கலை நயத்தோடு காணும் சிலையும் நமக்கு  கிடைத்திருக்குமா என்பது ஐயமே !

நம் கண்முண்ணே தவழ்ந்து விளையாடும் குழந்தையே நமக்கு ஓர் எடுத்துக்காட்டு தான்..!

எத்தனை தடவை தடுமாறி கீழே விழும் போதெல்லாம் சோர்ந்துப் போயிருந்தால் நடை பயில்வது என்பது சாத்தியமன்று. ஒவ்வொரு முறையும் படும் வலியை பொருட்படுத்தாமல் தோல்வியைக் கண்டு சோர்ந்து போகாமல் வெற்றி என்னும் விடியலை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டு தான் இருக்கின்றது. 

நண்பர்களே, வாழ்க்கையில் பல தடைகள் என்றும் உண்டு. தடைகளைப் பார்த்து தடுமாறி போகாமல் நம்பிக்கை என்னும் உயிர்த் துடிப்புடன் முடியும் என்று முயன்று கொண்டே இருந்தால் வெற்றி என்னும் விடியல் நிச்சயம் கிடைக்கும் , 

எத்தருணத்திலும் சோர்ந்து போகாதீர்கள் ! விடியல் உண்டு ! 

நன்றி!

Friday, September 18, 2020

நீட் தேர்வு கவிதை | Neet Exam | Poem about Neet Exam

 குடிசைச் சுவர்களின் நடுவில் கந்தலாடை மறைக்க கத்தியின்றி கணக்கில்லா சுகப்பிரசவம் பார்த்தவள் எந்த கல்லூரியில் படித்து எழுதினாள் இந்தத் தேர்வை ....,


எட்டு குழந்தை பெற்ற பின்பும் எட்டிப் பிடிக்கும் நடையினை நடந்த எமது தாய்மார்கள் எந்தக் குருகுலத்தில் கல்வி பயின்றார்கள் 

பிழையில்லா மருத்துவம் பார்க்க....,


பொறுமையின் சிகரமாய் பூமித்தாய் இருப்பதாலும் 

நீதித்தேவதையின் கண்களையும் கட்டி விட்ட தைரியத்தினால் தானோ 

அரங்கேறுகின்றது இந்த அவலங்கள் ,


கட்டிய கணவன் முன்னே தாலியை கழட்டச் சொல்லும் கல்வியறிவு....,


ராமாயணத்தில் தீக்குளித்த சீதை 

இன்றளவும் தீப்பிளம்பின் பிடியில் சிக்கிக் கொண்டு தான் இருக்கிறாள். 


கலியுக ராவணர்களின் பிடியில் கல்வி சிக்கிக் கொண்டு பாரபட்சம் பார்ப்பதால் ..., 


வஞ்சமில்லா பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்தவர்கள் யாரோ !

அகிலம் முழுவதும் மழலைச் செல்வங்கள் 

சொல்லும் எதிர்கால கனவு ஒன்று தான்

மருத்துவம் பார்ப்பது ....,


கிழிந்த ஆடையும் எண்ணெய் வழிந்த முகத்தையும் ஏற்றுக் கொண்ட கனவை 

புறம் தள்ளி நிறுத்தியது கவுரவம் என்ற கர்வம் ...., 


காந்தியால் பெற்ற சுதந்திரம் கடைக்கோடி

ஏழை மகளை இன்னும் எட்டவில்லை போல,


கனவைக் கூட சுதந்திரமாக நிறைவேற்ற முடியாமல் கரிக்கட்டையாக சாயும் தருணத்தில் ....,


இதுவும் ஒரு நரபலி கொடுமை தானோ...!


ஒவ்வொரு முறையும் 

உயிர்களை பலியிட்டப் பின்னரே ஆரம்பிக்கிறது....,


விடியல் உண்டு , சோர்ந்து போகாதே !

என்ற நம்பிக்கையும் கருவிழியின் மறுவிழியில் 

பதிந்த நீண்டகால கனவும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று உணர வைக்க நடத்தப்படுவது தான்  இந்த 

“நீட்” தேர்வோ ....!


ஆறாம் அறிவை உயிர்ப்பிக்கும் கல்வியறிவு நீட் என்ற பெயருடன் 

ஐந்தறிவு ஜீவன் போல் இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்க காத்திருக்கிறதோ ....!

Tuesday, September 15, 2020

கொரோனா கவிதை | Corona kavithai


இயற்கைக்காற்றைத் தேடித்தேடி சுவாசித்தவன்
இன்று நாசிக்கு திரையிட்டு மறைத்து கொள்கிறான் 
சுவாசிக்கவே பயந்து....,

கைக்கொடுத்தால் தான் நாகரிகம் என்றவன்
இன்று கையெடுத்துக் கும்பிடுகிறான் 
பாரம்பரியத்தின் மீது மரியாதையினால் அல்ல
பயத்தினால்....,

விரும்பிச் சென்று பேசிய நெஞ்சங்கள் எல்லாம்
விலகிச்செல்ல நினைக்கிறது....,

வாரியணைத்துக் கொள்ள துடிக்கிறது நெஞ்சம்
ஏனோ தடுக்கிறது மனம்

அருகாமையில் அழும் ஐந்து வயது மகனை தூக்க முடியாமல் தவிக்கும் தந்தையின் உள்ளம்....,

பார்த்துப் பழகிய கண்கள்
பேசிப் பழகிய உதடுகள்
கஷ்டத்தில் துடித்த இதயங்கள்
அனைத்தும்
இன்று மௌன அஞ்சலி செய்கின்றது

சமூக இடைவெளி என்ற போர்வையில்....,

சித்தன் அருளிய மருத்துவம் சிவனே
என்று கிடக்கின்றது 
ஏற்க மனமில்லாமல்

ஆங்கிலேயன் அனுப்பிய மருத்துவம்
ஆங்காங்கே தவித்து கிடக்கின்றது
தீர்க்க முடியாமல்....,

மனதைரியம்,
உடல் பலம்,
சந்தோஷம்,
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கரைந்து போகின்றது
ஒரு சிறிய  ஜலதோஷத்தினால்...

பாரி வள்ளலின் பரம்பரையில் வந்த 
கொடை வள்ளலோ ... !
தன்னையே பல கூறாகப்  பிரித்து 
தானம் அளிக்கையில்...

இதுவும் ஒருவகை உலகப்போர் தானோ
கோடிக்கணக்கான உள்ளங்களை  அகிம்சையாக பயமுறுத்தி அழிக்கும் 
ஆயுதத்தின் பெயர்

“கொரோனா “

Monday, September 7, 2020

நட்பு




எம்மதமும் சம்மதம் என்ற கூற்றை

உண்மையாக நிரூபித்துக் காட்டியவன்


உருவம் தெரியாதவன் இந்த உலகையே

ஆட்டிப் படைக்கிறான் அமைதிப் புரட்சியுடன்


நாற்காலி மீது அதிக மோகம் கொண்டவனோ

என்று எண்ணம் தோன்றுகிறது

அனைவரின் இதய சிம்மாசனத்தில் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளதால்


இன்பத்தில் பின்னால் நின்று சந்தோசப்படுவான்

துன்பத்தில் முன்னால் 

நின்று எதிர் கொள்வான்


மழலைச் செல்வங்கள் என்றும் பாராமல்

ஆக்கிரமித்துக் கொள்வான் 

மரணம் வரை கூடவே சென்றிடுவான்


இரத்த பந்தம் ஏதும் இல்லாதவன்

ஆனால் இரத்தத்தையே கொடுக்கும் சொந்தக்காரன்


ஐந்தறிவோ ஆறறிவோ எவ்வுயிராயினும்

எண்ண ஓட்டத்திற்கு தகுந்தாற் போல் அரிதாரம் பூசிக்கொள்ளும் ஆன்மாவிற்கு சொந்தக்காரன்


இவன் மலரும் சத்தம் கேட்பதில்லை

மலர்ந்த பிறகு உதிரவும் இல்லை

யார்தான் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை 

இவனுக்கு 

நட்பு 

என்று... !

Thursday, September 3, 2020

குழந்தை


 குதூகலத்தின் இருப்பிடமாய் 

இருப்பவன்

அனைவரின் கவலையையும்

ஒரே நொடியில் தகர்த்து எறிபவன்

இவனிடம் சரணாகதி அடையாதவர் 

எவரும் இல்லை

ஒற்றை சிரிப்பால் உலகையே 

வசியப்படுத்தி வைக்கும் வசியக்காரன்

இவனின் ஒற்றை வார்த்தை கேட்க

அனைவரும் தவம் கிடப்பார்கள் என்றே சொல்லலாம்

தெய்வமே இவனுக்கு அடுத்தப்படி தான்

என்பார்கள் பலரும்

கீழே விழுந்தால் தோல்வியை ஏற்காமல்

முயற்சியுடன் எழுந்து நிற்கும் தைரியக்காரன்

இவனின் அழுகை பலரின் சிரிப்பை போக்கும்

இவனின் சிரிப்பு பலரின் அழுகையை போக்கும்

அனைவரும் இவனிடம் குழைந்து குழைந்து பேசுவதால் தானோ இவனுக்கு பெயர்

“குழந்தை “

மனைவி


 ஆதியும் அந்தமுமாய் அனைவருக்குள்ளும் வியாபித்திருப்பவள்

இன்முகத்தோடு வரவேற்ப்பாள்

ஈன்ற தாய்க்கு அடுத்தபடியாய்

உரிமையாய் வாதிடுவாள் எனக்காக

ஊட்டி வளர்த்தவர்களாக இருந்தாலும்.,

தனது கண்ணீரை மறைத்து 

எனது கண்ணீரை துடைக்க ஓடி வருவாள்

எத்துன்பத்திலும்..,

தனக்கு பிடித்தவற்றை மறந்து 

எனக்கு பிடித்தவற்றை ஏற்றுக்கொள்வாள்

அது பிடிக்காவிட்டாலும் கூட.,

எல்லோருக்கும் ஓய்வென்று ஒரு நாள்

இவளுக்கோ 

எந்நாளும் ஓய்வில்லா திருநாள்

சுயநலம் கொண்டவளோ என்ற எண்ணம் தோன்றுகிறது 

அன்பு பாராட்டுவதில் அன்னையையே மிஞ்ச வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால்..,

கருவறையில் பத்து மாதம் குழந்தையையும் 

மனதறையில் மொத்த காலமும் என்னையும்

சுமக்கிறாள்

மூன்றே மூன்று முடிச்சுக்கு மதிப்பளித்து,


“மனைவியாய்”

Followers