Tuesday, September 15, 2020

கொரோனா கவிதை | Corona kavithai


இயற்கைக்காற்றைத் தேடித்தேடி சுவாசித்தவன்
இன்று நாசிக்கு திரையிட்டு மறைத்து கொள்கிறான் 
சுவாசிக்கவே பயந்து....,

கைக்கொடுத்தால் தான் நாகரிகம் என்றவன்
இன்று கையெடுத்துக் கும்பிடுகிறான் 
பாரம்பரியத்தின் மீது மரியாதையினால் அல்ல
பயத்தினால்....,

விரும்பிச் சென்று பேசிய நெஞ்சங்கள் எல்லாம்
விலகிச்செல்ல நினைக்கிறது....,

வாரியணைத்துக் கொள்ள துடிக்கிறது நெஞ்சம்
ஏனோ தடுக்கிறது மனம்

அருகாமையில் அழும் ஐந்து வயது மகனை தூக்க முடியாமல் தவிக்கும் தந்தையின் உள்ளம்....,

பார்த்துப் பழகிய கண்கள்
பேசிப் பழகிய உதடுகள்
கஷ்டத்தில் துடித்த இதயங்கள்
அனைத்தும்
இன்று மௌன அஞ்சலி செய்கின்றது

சமூக இடைவெளி என்ற போர்வையில்....,

சித்தன் அருளிய மருத்துவம் சிவனே
என்று கிடக்கின்றது 
ஏற்க மனமில்லாமல்

ஆங்கிலேயன் அனுப்பிய மருத்துவம்
ஆங்காங்கே தவித்து கிடக்கின்றது
தீர்க்க முடியாமல்....,

மனதைரியம்,
உடல் பலம்,
சந்தோஷம்,
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கரைந்து போகின்றது
ஒரு சிறிய  ஜலதோஷத்தினால்...

பாரி வள்ளலின் பரம்பரையில் வந்த 
கொடை வள்ளலோ ... !
தன்னையே பல கூறாகப்  பிரித்து 
தானம் அளிக்கையில்...

இதுவும் ஒருவகை உலகப்போர் தானோ
கோடிக்கணக்கான உள்ளங்களை  அகிம்சையாக பயமுறுத்தி அழிக்கும் 
ஆயுதத்தின் பெயர்

“கொரோனா “

No comments:

Post a Comment

Followers